புதுடில்லி, :பகுதி நேர வேலை வாய்ப்புகள் அளிப்பதாக கூறி, சட்டவிரோத முதலீட்டுக்கு வழிவகுத்ததுடன், வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மத்திய அரசால் நேற்று முடக்கப்பட்டன.
சமீபகாலமாக இணையதளங்கள் வாயிலான குற்றங்கள் நாடு முழுதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வேலைவாய்ப்பு பெயரில் அரங்கேறும் மோசடியில் சிக்கி பலர் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து உள்ளனர்.
இதனால், தற்கொலை சம்பவங்களும் நடந்ததை அடுத்து, அது தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியது.
சட்டவிரோத முதலீடு
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.டி.ஏ.யு., எனப்படும் தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, இது போன்ற மோசடியில் ஈடுபடும் இணையதளங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டது.
பட்டியலில் இருந்த பெயர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், மோசடிக்கு காரணமான 100க்கும் மேற்பட்ட இணையதளங்களை நேற்று முடக்கியது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
சட்டவிரோத முதலீடு தொடர்பான பொருளாதார குற்றங்களுக்கு காரணமான, 100க்கும் மேற்பட்ட இணையதளங்கள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் அரங்கேற்றப்பட்ட மோசடி வாயிலாக பெற்ற பணம் சர்வதேச, ‘பின்டெக்’ எனப்படும் தொழில்நுட்ப நிதி நிறுவனங்களை பயன்படுத்தி வெளிநாட்டில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. ‘1930’ என்ற இலவச தொலைபேசி அழைப்பு வாயிலாக இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.
இந்த குற்றங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தங்களின் தரவு பாதுகாப்பு தொடர்பான கவலையையும் அது அதிகரித்தது.
கவனம்
வீட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற ஆசைகாட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் அரங்கேறி உள்ளன.
ஓய்வு பெற்ற ஊழியர்கள், பெண்கள் மற்றும் பகுதி நேர வேலை தேடும் வேலையற்ற இளைஞர்கள் இவர்களின் இலக்குகளாக உள்ளனர்.
பகுதிநேர வேலை செய்வதற்கு கணிசமான தொகையை அளிக்கும் இந்த நிறுவனங்கள், சம்பந்தப்பட்டவரின் நம்பிக்கையை பெற்ற பின், அவர்களை கூடுதல் வருமானம் பெற ஒரு தொகையை வைப்பு நிதியாக அனுப்ப கோருகிறது.
பணம் அனுப்பப்பட்ட பின் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இது போன்ற விஷயங்களில் ஏமாறாமல் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்