America is waiting for Indias investigation into the attempted murder of a terrorist | பயங்கரவாதி மீது கொலை முயற்சி விவகாரம் இந்திய விசாரணைக்கு அமெரிக்கா காத்திருப்பு

வாஷிங்டன், ‘அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது நடந்த கொலை முயற்சியில் இந்திய அதிகாரிக்கு உள்ள தொடர்பு குறித்து, இந்திய அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என, அமெரிக்கா கூறியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றச்சாட்டு

இதில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

நம்பிக்கை

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று கூறியுள்ளதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

அமெரிக்க மண்ணில் நடந்துள்ள இந்த கொலை முயற்சி விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்து உள்ளோம்.

அதுவும் நாடு விட்டு மற்றொரு நாட்டில் தாக்குதல் நடத்துவது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது இந்தியா தொடர்பானது மட்டுமல்ல; எந்த நாடாக இருந்தாலும், இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்போம்.

இந்த விஷயத்தில், இந்திய அரசின் விசாரணை வெளிப்படையாகவும், விரிவானதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

நிஜ்ஜார் கொலை விஷயத்தில், கனடா அரசுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் முழு உண்மை வெளியே வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்லி., மீது தாக்குதலா?

அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளரான, சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பின் தலைவரான பன்னுான், சமீபத்தில் வெளியிட்ட ஒரு, ‘வீடியோ’வில், 2001ல் இந்திய பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய டிச., 13ல், மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதையடுத்து, பார்லிமென்ட் உட்பட புதுடில்லியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.