புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெற, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ளார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பிய சிபிஐ(எம்) கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். மேலும், இதேபோன்ற குற்றச்சாட்டை கனடா ஏற்கெனவே முன்வைத்திருப்பது குறித்தும் ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ”அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது” என தெரிவித்தார்.
இந்நிலையில், குருபத்வந்த் பன்னு விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இதனை தெரிவித்துள்ளார். வரும் 11-ம் தேதி கிறிஸ்டோபர் ரே புதுடெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.