மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த பெரும் மழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்படச் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றுதல், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். அதேசமயம், `முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.
அதற்கெல்லாம் பதிலாக, “ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறது எனச் சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை, பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், `சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட தி.மு.க அரசு தயாரா… பணி முடிந்த ஒவ்வோர் இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கைத் தரத் தயாரா… பணிகள் 100 சதவிதம் முடிந்த இடங்கள், தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.
ஏதாவது சொல்லி, ஏமாற்றித் தப்பித்துவிடலாம் என்று இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலைப் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், “வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாநகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 ரூபாய் கோடிக்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.