புதுடில்லி,மரண தண்டனை விதிக்கப்பட்டு, கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நம் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேரை, கத்தாருக்கான இந்திய துாதர், அங்குள்ள சிறையில் சந்தித்து பேசினார். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
போர் கப்பல்
மேற்காசிய நாடான கத்தாரில், ‘தாஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனம் உள்ளது. அந்நாட்டு ஆயுதப் படையினருக்கான பயிற்சி உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.
இந்த நிறுவனத்தில், நம் கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள் பணியாற்றினர். இவர்கள் நம் நாட்டில் போர் கப்பல்களை கையாண்ட அனுபவம் பெற்றவர்கள்.
ஐரோப்பிய நாடான இத்தாலி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி போர் கப்பல் தொடர்பான பணியில் இவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இஸ்ரேல் நாட்டுக்காக இவர்கள் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எட்டு இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
கடந்த மாதம் 23 மற்றும் 30ம் தேதிகளில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்தது. இந்நிலையில், ‘சிஓபி 28’ எனப்படும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் துபாய் சென்றார்.
அப்போது, கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
பெரிய முன்னேற்றம்
இந்நிலையில், கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளான எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளை, கத்தாருக்கான இந்திய துாதர் கடந்த 3ம் தேதி சிறையில் சந்தித்து பேசியுள்ளார்.
கத்தார் ஆட்சியாளருடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பின், சிறையில் உள்ள இந்தியர்களை சந்திக்க, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது மிகப் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை, நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று உறுதிப்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்