திருவனந்தபுரம், கேரளாவில் பி.எம்.டபிள்யூ., கார், 150 சவரன் நகை தராததால் திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து, பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான மற்றொரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெஞ்சரமூடு பகுதி யில் வசித்தவர் டாக்டர் சஹானா, 26. இவரது தந்தை வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், இரண்டு ஆண்டு களுக்கு முன் இறந்தார்.
இதையடுத்து, தன் தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் கேரளாவில் சஹானா வசித்து வந்தார்.
இவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார்.
அப்போது, அங்கு படித்த ருவைஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து, இரு வீட்டாரும் சமீபத்தில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், சஹானா தான் வசித்து வந்த வீட்டில் இறந்து கிடந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் செய்ய பி.எம்.டபிள்யூ., சொகுசு கார், 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம் ஆகியவை ருவைஸ் வீட்டில் வரதட்சணையாக கேட்டது தெரியவந்தது.
இதற்கு சஹானா குடும்பம் மறுத்ததை அடுத்து, ருவைஸ் மற்றும் அவரது வீட்டார் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சஹானா, மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, ருவைசை நேற்று திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம், தற்கொலைக்கு துாண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வரதட்சணை தொடர்பான புகார் என்பதால், அது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்