“பேயை நம்பினோர் கைவிடப்படார்னு சுந்தர்.சி சார் சொன்னார்!'' – சதீஷ் ஜாலி!

மேடை நாடகம் தொடங்கி, தமிழ் சினிமா வரை தமிழக மக்களுக்குப் பரிட்சயமானவர், சதீஷ். காமெடி நடிகராக இருந்தவர், கடந்த வருடம், `நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்தார். தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். தற்போது, `கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், அவருடன் ஸ்மால் சாட் !

`கான்ஜூரிங் கண்ணப்பன்’ கதை கேட்டவுடன் என்ன தோணுச்சு?

“எனக்கு பேய்ப் படங்கள்னா எப்போவும் பிடிக்கும். தமிழ் மட்டுமல்ல எந்த மொழியா இருந்தாலும் பேய்ப் படம்னா தியேட்டருக்குப் போய்ப் பார்த்திடுவேன். அதுவும் நண்பர்களா, குடும்பமா சேர்ந்து குரூப்பா பார்க்கிறது ஒரு மாதிரி ஜாலியா இருக்கும். அப்படி இருக்கும்போது, எனக்கு இந்தக் கதை வந்த போது, ரொம்ப சந்தோஷமா இருந்தது, கதையும் ரொம்ப நல்லாருந்தது. ஹாரர் காமெடி எப்போவும் சூப்பரா வொர்க்கவுட்டாகும். அதனாலதான், ஓகே சொன்னேன். என்னுடைய

`Godfather’னு சொல்றதைவிட `God’ன்னே சொல்லலாம் கல்பாத்தி அகோரம் சார். அவரைக் கதை கேட்க வெச்சோம். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படிதான் ஆரம்பிச்சோம். நாங்க ஒரு பட்ஜெட் பிளான் பண்ணிச் சொல்லியிருந்தோம். ஆனா, ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதைவிட அதிகமா செலவு செஞ்சு… நாசர் சார், சரண்யா பொன்வண்ணன் அம்மா, வி.டி.வி கணேஷ் அண்ணன், யுவன் சார் மியூசிக்னு எல்லாமே பெரிய பெரிய பெயர்களா கொண்டுவந்தாங்க. படமா ரொம்ப நல்லா வந்திருக்கு.”

காமெடி ரோல்கள் இனி பண்ணமாட்டீங்களா?

“உண்மையைச் சொல்லணும்னா, `நாய் சேகர்’ படத்துக்கு அப்புறம், லீடு ரோல்ல நடிக்கத்தான் கதைகள் வந்துக்கிட்டிருக்கு. எல்லாமே ஜாலியான கதைகள்தான். நானும் ஜாலியா பண்ணிக்கிட்டிருக்கேன், பார்ப்போம்.”

ஹீரோவாகிட்டதால டான்ஸ், ஸ்டன்ட்னு ஏதாவது ப்ராக்டீஸ் பண்ணுறீங்களா?

“என்னதான் நாலு நாளுக்கு முன்னாடி ரிகர்சல் பண்ணிட்டு டான்ஸ் ஆடினாலும், முறையா டான்ஸ் கத்துக்குற மாதிரி வராது. இனி டான்ஸ் கத்துக்கணும். அதேமாதிரி, ஸ்டன்ட் சீக்வென்ஸுக்கு நம்மளை தயார்படுத்திக்கணும்.”

`கான்ஜூரிங் கண்ணப்பன்’ டிரெய்லருக்கு செம ரெஸ்பான்ஸ் இருந்தது. கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கூட வீடியோவா பதிவு பண்ணியிருந்தாரே?

“டிரெய்லர் வந்ததும் நிறைய பேர் சூப்பரா இருக்குன்னு பேசினாங்க. சுந்தர்.சி சாரும் குஷ்பு அக்காவும் போன் பண்ணினாங்க. அவர்தான் அடிக்கடி `பேயை நம்பினோர் கைவிடப்படார்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். தினேஷ் கார்த்திக் பிரதர் எனக்கு நல்ல பழக்கம். ஆனா, அஷ்வின் அளவுக்கு நெருக்கம் கிடையாது. எங்களுக்கு அனந்துனு பொதுவான நண்பர் ஒருத்தர் இருக்கார். அப்படி டிரெய்லர் பாத்துட்டுப் பேசினார். அப்போ, இதை உங்க சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்ணுனா, படத்துடைய புரொமோஷனுக்குப் பயனா இருக்கும்னு சொன்னேன். மறுநாள் இந்தியா – நியூசிலாந்து அரை இறுதிப் போட்டிக்கான கமென்ட்ரி பேசப் போய்க்கிட்டிருக்கார். நான் கேட்டேன்னு, உடனே ஏர்போர்ட்ல உட்கார்ந்து வீடியோவாப் பேசி போஸ்ட் பண்ணியிருந்தார். ரொம்ப ரொம்ப நன்றி டிகே ப்ரோ!”

அடுத்து என்னென்ன படங்கள்?

`முஸ்தஃபா முஸ்தஃபா’ன்னு ஜாலியா ஒரு படம். `லவ் டுடே’ மாதிரி போனை வெச்சு ஒண்ணு பண்ணியிருக்கோம். முழுக்க முழுக்க ஃபன்னா இருக்கும். அடுத்து, `சட்டம் என் கையில்’னு ஒரு சீரியஸான படம். என்னுடைய மச்சான் சாச்சிதான் இதை இயக்கியிருக்கார். இதுக்கு முன்னாடி, வைபவ் வெச்சு `சிக்ஸர்’னு ஒரு படம் பண்ணியிருந்தார். லோகேஷ் கனகராஜ்கிட்ட உதவி இயக்குநரா இருந்த வெங்கி இயக்கத்துல `வித்தைக்காரன்’ படம் நடிச்சு முடிச்சிருக்கேன். இது `டாக்டர்’ மாதிரி டார்க் ஹியூமர் படமா இருக்கும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.