கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. அகிலா தமிழகத்தில் ஒரு மெடிக்கல் காலேஜில் ஹோமியோ மருத்துவம் படித்தார். 2016-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா என மாற்றிக்கொண்டார். 2017-ம் ஆண்டு கொல்லத்தைச் சேர்ந்த ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரம் அப்போது லவ் ஜிகாத் என்ற பெயரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரின் பெற்றோர் அந்த சமயத்தில் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அகிலா என்ற ஹதியா, சுப்ரீம் கோர்ட்டுவரை சென்றார். அதற்காக சில மணி நேரங்களில் ஒரு கோடி ரூபாய் வரை திரட்டியதாக அப்போது கூறப்பட்டது.

ஹதியா மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி வாழ கோர்ட் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் மலப்புரத்தில் கணவருடன் வசித்துவந்த தன் மகள் அகிலா என்ற ஹதியாவை திடீரென காணவில்லை என, அவரின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘என்னுடைய மகளை சிலர் சட்டவிரோதமாக கஸ்டடியில் வைத்துள்ளனர். மலப்புரத்தில் என் மகள் ஹோமியோ கிளினிக் நடத்திவந்தார். அவரிடம் நானும், என் மனைவியும் அடிக்கடி போனில் பேசிவந்ததுடன், கிளினிக்குக்கும் அவ்வப்போது சென்று வந்தோம். கடந்த ஒரு மாதமாக போனில் தொடர்புகொள்ள முயன்றும், மகள் போன் எடுக்கவில்லை. சில சமயங்களில் அவரது போன் ஸ்விட்-ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. கடந்த 3-ம் தேதி ஹோமியோ கிளினிக்குக்கு நேரில் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் என்னுடைய மகள் எங்கு சென்றார் என அவர்களுக்கு தெரியவில்லை என்றனர். திருமணம் செய்துகொண்ட ஷபின் ஜஹானுடன் தாம்பத்ய பந்தம் இல்லை என, மகள் இதற்கு முன்பு கூறியிருந்தார். எனவே என்னுடைய மகளை கண்டுபிடித்து தரவேண்டும்’ எனக் கூறியிருந்தார். அந்த மனுவை வரும் 12-ம் தேதி விசாரிப்பதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹதியா மீடியாக்களுக்கு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் ஹதியா கூறுகையில், “நான் எங்கேயும் செல்லவில்லை மறுமணம் முடித்துக் கொண்டு, இரண்டாவது கணவருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறேன். இது என்னுடைய தந்தைக்கும் தெரியும். முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்டு எட்டு வருடங்கள் ஆகிறது. அப்போதே என் தந்தை தரப்பிலிருந்து எனக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இப்போதும் அது தொடர்கிறது. சங் பரிவார் அமைப்புகள் என் தந்தையை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. அதற்கு என் தந்தையும் உடந்தையாக இருக்கிறார் என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை இது மிகவும் மோசமாக பாதிக்கிறது. ஒன்றுமே இல்லாத விஷயங்களை கூறி என்னுடைய தந்தை வழக்கு தொடுக்கிறார். இதை வைத்து என்மீது சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்புபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறேன்.
ஏற்கெனவே தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. நான் மேஜர் என்பதால் எனது விருப்பத்தை கோர்ட் அனுமதித்தது. அதன் பிறகு எங்களால் ஒன்றாக வாழ முடியாது என்பதால், நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம். அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. நான் மற்றொரு திருமணம் செய்து கொண்டேன். எனது இரண்டாவது திருமணத்தை சர்ச்சையாக்க வேண்டாம். விவாகரத்து செய்யவும் திரும்பவும் திருமணம் செய்து கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. நான் திருமணம் செய்யும்போது மட்டும் இவ்வளவு சர்ச்சை செய்வது எதற்காக என்பதுதான் எனது கேள்வி. அது எனது உரிமை நான் சின்ன குழந்தை அல்ல… எனக்கு என்னை குறித்த முடிவுகள் எடுப்பதற்கு வயதும் பக்குவமும் உண்டு. அதனால் ஒத்துப்போகாத திருமண பந்தத்திலிருந்து விலகி வேறு திருமணம் செய்து கொண்டேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னுடைய தாய், தந்தைக்கும், க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கும் இதெல்லாம் தெரியும். அவர்கள் எனக்கு போனில் அழைப்பது வழக்கம். நான் வேறு திருமணம் செய்து கொண்டது என் தந்தைக்கு தெரியும். தந்தை ஒரு நாள் என்னை அழைத்து போனில் பேசிய பிறகும், ஆட்கொணர்வு மனு எதற்காக தாக்கல் செய்தார் என்று என் தந்தையிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நான் முஸ்லிம் ஆன பிறகு திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன். திருமணம் என்பது நான் தேர்வு செய்தது. அதன் பின்னால் சில அமைப்புகள் இருப்பதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. 2016-ம் ஆண்டு நான் முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்டேன். 2017-ம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் எனது தேர்வாக இருந்தால், அது ஒரு போதும் லவ் ஜிகாத் அல்ல. இதை நான் ஏற்கெனவே கோர்ட்டில் தெளிவுபடுத்தி உள்ளேன். இப்போது திருவனந்தபுரத்தில் உள்ளேன். இங்கு கிளினிக் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து உள்ளேன். மேற்படிப்பு படிப்பதற்கான எண்ணமும் இருக்கிறது. நான் எங்கும் போகவில்லை, எனது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படவில்லை” என்றார்.