மும்பை அருகிலுள்ள கல்யான் என்ற இடத்தில் வசிப்பவர் சிவாஜி பாட்டீல் (61). அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். ஓய்வூதியம் தொடர்பாக சிவாஜிக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு திடீரென பாட்டீலுக்கு வீட்டில் தீக்காயம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “என்னுடைய மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி ஓய்வூதியம் தொடர்பாக சண்டை ஏற்படுவது வழக்கம். அதோடு அடிக்கடி இரண்டு வாலிபர்கள் எங்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இரவில் அந்த வாலிபர்கள் இரண்டு பேரும் வந்தனர். அவர்கள் வந்தவுடன் வீட்டில் சண்டை ஏற்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் என்மீது ஏதோ ஒரு எரிபொருளை ஊற்றினர். உடனே என்னுடைய மனைவி என்மீது தீவைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பாட்டீல் ஒரு முறை தன்னுடைய மனைவிமீது போலீஸில் புகார் செய்திருந்தார்.
பாட்டீல் வீட்டிற்கு அடிக்கடி வந்த இரண்டு பேரில் ஒருவர் பாட்டீல் மகளின் காதலன் என்று கூறப்படுகிறது. பாட்டீல் மனைவி தன்னுடைய மகள் அந்த வாலிபருடன் நட்பு வைத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதோடு ஓய்வூதியம் முழுவதையும் தன்னிடம் கொடுக்கவேண்டும் என்று பாட்டீலிடம் அவரின் மனைவி அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர். பாட்டீல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பாட்டீல் மனைவி மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.