அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு உரிய பாதுகாப்புத் திட்டம் வகுக்கும் வரை எஸ்.டி.எஃப். அதிகாரிகளை பாதுகாப்புப் பணியில் உட்படுத்த கால அவகாசம் வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடமும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
நிலையியற் கட்டளைகள் 27/2 இன் கீழ் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து எஸ்.டி.எஃப் அதிகாரிகளை அகற்றுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார், மேலும் அந்த வீதிகளின் பாதுகாப்புப் பணிகளை எஸ்.டி.எப். அதிகாரிகள் மேற்கொள்வது அவர்களது கடமையல்ல என்பதை அமைச்சராக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.
தீயணைப்புப்படை மற்றும் பிற அலுவலர்கள், நெடுஞ்சாலைகளில் பணியாற்ற வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடைமுறையில் நீண்ட நாட்களாக எஸ்.டி.எப் அதிகாரிகள் நெடுஞ்சாலைளில் பாதுகாப்பு பணிகளுக்காக உட்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
நெடுஞ்சாலைகளுக்கு உரிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை திட்டமிடப்படும் வரை கால அவகாசம் தேவை என்பதால், அதற்கான கால அவகாசம் வழங்கி,; எஸ்.டி.எஃப் அதிகாரிகளை நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அதனை மேற்கொள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.