மதுரை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்த மைதான கட்டுமானப்பணியை டிசம்பரில் முடிக்க, இறுதிக்கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடக்கிறது.
வீர விளையாட்டு என்று அதன் பெயரில் மட்டுமல்லாமல், உயிரை கொடுத்து வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை தாண்டி நடக்கிறது. நூற்றாண்டுகளை கடந்து நடக்கும் இந்த விளையாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விளையாட்டாக கருதப்படுகிறது.
தமிழகத்தில், மதுரை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் போன்ற பல மாவட்டங்களில் நடக்கிறது. ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலக பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை காண, ‘கிரிக்கெட்’ போட்டியை போன்று உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக பார்வையாளர்களும் மதுரையில் திரள்வார்கள். ஆனால், போட்டி நடக்கும் நாளில் இந்த போட்டி காலை 8.30 மணியளவில் தொடங்கினாலும் பார்வையாளர்களுக்கான கேலரியில் இடம்பிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டியை காண, முந்தைய நாள் இரவே டோக்கன் வாங்கி இடம்பிடிக்க வேண்டும். மற்றவர்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியின் வர்ணயாளர்களின் குரலை மட்டுமே கேட்டு செல்லும் ஏமாற்றம் தொடர்கிறது.
தற்போது டிவிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் வாடிவாசலை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்ட பார்வையாளர்களும் இந்த போட்டியையும், திமில்களை பிடித்து அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அடங்க மறுத்து திமிறி எழும் காளைகளின் வீரத்தையும் பார்க்க முடிகிறது.
உச்சநீதிமன்றத்தில் இந்த போட்டிகளுக்கான தடைகள் ஏற்பட்டபோது, ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியமும், அதன் சுவாரசியமும் உலகம் முழுவதும் பரவியது. அதனால், தற்போது கிரிக்கெட் போட்டியை போல், ஜல்லிக்கட்டுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் நேரடியாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் இந்த போட்டியை காண்பதில் சிக்கல் நிலவுகிறது. அந்த குறையை போக்கும் வகையில் தற்போது மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66.8 ஏக்கரில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் கட்டப்படுகிறது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்படுகின்றன.
தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன.
16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெறுகிறது.
9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறையும், 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்படுகின்றன.
மைதானத்தில் முகப்பு நுழைவு வாயிலில் காளைகள் சிற்ப பீடம், பார்வையாளர்கள் எளிதாக மைதானத்திற்கு வந்து போட்டிகளை பார்த்து செல்வதற்காக பிரத்தியே தார்ச்சாலைகள் வசதி, மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி, பார்வையாளர்களை கவர செயற்கை நீரூற்று, புல் தரை அமைக்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 50,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 50,000 லிட்டர் தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முந்தைய நாளே வரும் காளைகள் உரிமையாளர்கள் ஓய்விடம், காளைகள் ஓய்விடம், சுகாதார கழிப்பறை வசதிகள், கால்நடை மருந்தகம், மாடுபிடி வீரர்கள் சிகிச்சை மருத்துவமனை, வாடிவாசல் செல்லும் காளைகள் பரிசோதனை கூடம் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன வசதிகள் இருக்குமோ? அத்தனை வசதிகளும் இந்த மைதானத்தில் ஏற்படுத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு மைதான வளாகத்தில் அருங்காட்சியகம் அமைகிறது. அதில், ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், கபடி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடக்கும்நிலையில் டிசம்பரில் முடித்து அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் பாரம்பரிய போட்டிகளுக்கு பிறகு ஒரு நாளில் இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சுத்தமான தென்றல் காற்று வருடும் இடத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் பொங்கல் பண்டிகையும், அதனை முன்னிட்டு இந்த மைதானத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் மதுரை தாண்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.