ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப மாலையிட்டு சபரிமலை செய்யும் யாத்ரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். கேரளா மட்டுமல்லாது தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலையிட்டுச் செல்வது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் பக்தர்கள் சபரிமலை நோக்கிக் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.
நவம்பர் 16ம் தே-தி மண்டல பூஜைக்காக நடை திறந்தது முதல் பக்தர்கள் தரிசனம் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கூட்ட நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். முறையாக தரிசனம் செய்ய முடியவில்லை என்கிறார்கள். சிலர் சந்நிதானமே செல்ல முடியாமல் கூட்ட நெரிசல் காரணமாக பம்பாவில் இருந்தே திரும்பிவிடுகிறார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸும் நிர்வாகிகளும் திணறுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் குளறுபடிகளுக்கு நடுவே பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன. நேற்று சிறுவன் ஒருவன் பேருந்தில் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பக்தர்களை நெகிழச் செய்தது. இவ்வளவு பிரச்னைகளும் இந்த ஆண்டு மட்டும் ஏன் ஏற்படுகின்றன? வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்துவிட்டார்களா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமண்யத்திடம் கேட்டோம்.
“சாமி சரணம். இந்த ஆண்டு மட்டுமல்ல. ஒவ்வோர் ஆண்டுமே சபரிமலை கார்த்திகை மார்கழி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். சொல்லப்போனால் இதைவிட அதிகமான கூட்டத்தை எல்லாம் சபரிமலை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் நிகழாத இந்த சிக்கல்கள் இப்போது நிகழ்வதற்கு முற்றிலும் நிர்வாகக் குளறுபடிகளே காரணம்.
கடந்த 8 – 9 ஆண்டுகளாகவே ஆன்லைன் புக்கிங் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் இதைக் கேரளா போலீஸார் கவனித்துவந்தனர். இப்போது அந்த நிர்வாகம் தேவசம்போர்ட் வசம் வந்திருக்கிறது. அவர்கள் அதை முறைப்படுத்தாமல் பிரச்னைகளை இன்னும் தீவிரமாக்கிவிட்டார்கள்.
உதாரணமாக ஆன்லைன் புக்கிங் மூலம் ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அதேவேளையில் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங்கிற்கும் அனுமதிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஸ்பாட் புக்கிங்கில் 40 ஆயிரம் பேர் வந்துவிடுகிறார்கள். இப்போது ஏற்கெனவே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் போதாமல் போகின்றன.
இரண்டாவது, திருப்பதி மாதிரியைப் பின்பற்றுகிறோம் என்று கூறி, கூண்டு கட்டி விட்டிருக்கிறார்கள். திருப்பதியில் கூண்டு கட்டி விட்டிருக்கிறார்கள் என்றால் அங்கு அதற்கு உண்டான வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உணவு முதல் கழிவறை வரை சகல வசதிகளும் அங்கே இருக்கும். ஆனால் இங்கே உணவு, கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் பிஸ்கட்கள் விநியோகிக்கிறார்கள் என்றாலும் அது போதுமானதல்ல. அடிப்படை வசதிகள் இன்றிப் பல மணிநேரங்கள் காத்திருக்கும் ஒருவர் புழுக்கத்திலும் வெறுப்பிலும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயல்கிறார். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது ஏன் இந்த முறையைக் கொண்டு வந்தார்கள் என்பதே புரியவில்லை.

மூன்றாவது நீங்கள் பம்பா வரைக்கும் சொந்த வாகனத்தில் சென்றாலும் அது நிலக்கல்லில் உங்களை இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அங்கே நிறுத்திவைக்க இயலாது. பிறகு திரும்புவதற்கு அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளையே நாட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு ஒரு பேருந்து என்கிறார்கள். ஆனால் காத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்போது பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அப்படியே இருக்கும் பேருந்துகளைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் பக்தர்களை முறைப்படுத்தி அதில் ஏற வகை செய்யப் போதுமான காவலர்கள் இல்லை. எனவே பக்தர்கள் இஷ்டத்துக்கு முண்டியடித்துக்கொண்டு ஏறும் நிலை ஏற்படுகிறது. இதில் ஏற்படும் தள்ளுமுள்ளு பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இவற்றை எல்லாம் மிக எளிதாக முறைப்படுத்தலாம். ஆனால் நிர்வாகமோ அதைக் கண்டுகொள்ளாமல் பக்தர்களைக் குழப்பத்தில் வைத்திருக்கிறது.
மேலும், பெரிய பாதையில் வரும் பக்தர்களுக்கு எந்தவித சலுகையும் இல்லை. திருப்பதியில் கூட நடந்துவரும் பக்தர்களுக்குச் சிறப்பு தரிசன சலுகை உண்டு. இங்கே அது இல்லை. மாறாக சில மணி நேரங்கள் புல்லுமேடு வழியாகப் பயணித்துவருபவர்கள் நேரடியாகப் பதினெட்டாம் படியேற அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை அனுமதிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் பெரிய பாதையில் நான்கு ஐந்து நாள்கள் சிரமப்பட்டு வரும் பக்தர்களுக்கும் முன்னுரிமை தரவேண்டும். கரிமலைப் பகுதியில் அவர்களுக்கு சிறப்பு டோக்கன்கள் வழங்கினால் அவர்களும் பயன் அடைவார்கள். இல்லை என்றால் அவர்கள் பல நாள்கள் நடந்துவந்தும் கூண்டுகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இவை அனைத்துமே சரி செய்ய முடிகிற பிரச்னைகள்தான். நேற்று மாலை காவல்துறையினர் இனி நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் கிடையாது என்று சொல்லியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அப்படி ஏதேனும் ஒருவகையில் கூட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும். போதுமான காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட வேண்டும். பேருந்து வசதிகளை முறைப்படுத்த வேண்டும். இப்படி நிர்வாகக் குளறுபடிகளை நீக்கிவிட்டாலே சபரிமலைக்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும் சமாளித்துவிடலாம்.
இவை அனைத்துக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஒரு மண்டலகாலம் முறையாக விரதம் இருந்து சபரிமலை வாருங்கள். பத்து நாள் பதினைந்து நாள் விரதத்திலேயே கூட்டத்துக்கு முன்பாகச் சென்று வந்துவிட வேண்டும் என்று சபரிமலை செல்ல வேண்டாம். அதுதான் திடீர் கூட்டம் அதிகரிக்கக் காரணம். மேலும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை வருகிறோம். அப்படி வரும் வேளையில் சில மணி நேரக் காத்திருப்புகள் நிகழும்போது பொறுமையும் ஒழுக்கமும் காத்து முண்டியடித்துக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்” என்றார் அரவிந்த் சுப்ரமணியம்.