நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு நாளான இன்று (புதன்கிழமை) அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பி.கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி உள்பட பலரும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயருடன் இணைந்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.