மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்காவின் விசேட பிரதிநிதி அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன சமத்துவம் மற்றும் நீதிக்கான விசேட பிரதிநிதியான டிசைரீ கோர்மியர் ஸ்மித், நேற்று அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதியிடம் அமைச்சர் ஜீவன் எடுத்துரைத்ததுடன், மலையக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், மலையக மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சரிடம்;, அமெரிக்க பிரதிநிதி கேட்டறிந்துகொண்டார். அமைச்சின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கருத்துகளை அறிந்துகொண்டார்.
இதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அமெரிக்க தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி பயிற்சி நடவடிக்கையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.