துபாய் : பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மிக முக்கியமான ஒப்பந்தம், ஐ.நா., பருவநிலை மாறுபாடு மாநாட்டில் கையெழுத்தானது. பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் முயற்சி
உலகம் சந்திக்கும் மிகப் பெரும் பிரச்னையாக, பருவநிலை மாறுபாடு உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஐ.நா.,வின் சார்பில், பருவநிலை மாறுபாடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பான மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் 2050ம் ஆண்டுக்குள், பூஜ்ய காற்று மாசு உமிழ்வை எட்டும் வகையில், பூமியில் இருந்து எடுக்கப்படும், பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. ஆனால் இதில், ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், சி.ஓ.பி., – 28 எனப்படும் உறுப்பினர்களின் மாநாடு, கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்தது. இதில், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
காற்று மாசு இதைத் தொடர்ந்து, 200 நாடுகள் இணைந்து, நேற்று ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாட்டில் இருந்து மாசில்லா எரிபொருட்களுக்கு மாறுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக குறைப்பது என்றில்லாமல், முற்றிலும் நிறுத்துவது என்று எடுக்கப்பட்ட இந்த முடிவு, வரலாற்று சிறப்புமிக்கதாகும். முதல்முறையாக அனைத்து நாடுகளும் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக, மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
தற்போது உலகெங்கும் உள்ள எரிபொருள் தேவையில், 80 சதவீதம், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி வாயிலாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்த எரிபொருட்களே, காற்று மாசுக்கு மிக
முக்கிய காரணமாகும்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாடும், தங்களுடைய கொள்கைகளை உருவாக்கி, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, மாற்று எரிசக்தி முறைக்கு மாறத் துவங்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்