Ameer: "அடையாளத்தைப் பெற்று தந்த எனது முதல் படம்; சூர்யாவுக்கு நன்றி!" – அமீரின் நெகிழ்ச்சி பதிவு

இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’.

அமீரின் இந்த முதல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்ற இத்திரைப்படம் வெளியாகி இன்று 21 ஆண்டுகளைக்  கடந்து உள்ளது. இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குநர் அமீர் அறிக்கை ஒற்றை வெளியிட்டிருக்கிறார்.

Mounam Pesiyadhe Movie

அதில், “மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்குத் தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை.

சூர்யா

அப்படி கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னைக் கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்குக் கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் – நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்!

Director Ameer

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக ‘மௌனம் பேசியதே’ ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.