புதுடில்லி :காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த நாளிலேயே, பார்லிமென்டில் தாக்குல் நடந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், இந்த தாக்குதலில் அவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவை தலைமையகமாக வைத்து, ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் உள்ளார். இவர், அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
கடந்த 2001 டிச., 13ல், பார்லி.,யில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதல் நடத்திய ஐந்து பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினத்தையொட்டி, ‘பார்லி.,யில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்’ என, பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப் போவதாக அவர் மிரட்டல் விடுத்த நாளிலேயே, நேற்று பார்லி.,யில் தாக்குதல் நடந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறுகையில், ”அச்சுறுத்தல் விடுத்து ஒருசில பயங்கரவாதிகள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றனர். எனினும், இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளது.
”இந்த குறிப்பிட்ட விவகாரத்தை, அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம். அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement