நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் முதலில் அறிவிக்கப்பட்டன. பின்னர் மிசோரம் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் தெலங்கானாவிலும், மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சி அமைத்திருக்கின்றன. மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்ற நிலையில், அந்த மாநிலங்களுக்கான முதல்வர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாமலிருந்தது. இந்த நிலையில், புதுமுக முதல்வர்களாக சத்தீஸ்கருக்கு விஷ்ணு தியோ சாய்-யும், மத்தியப் பிரதேசத்துக்கு மோகன் யாதவ்-வும், ராஜஸ்தானுக்கு பஜன்லால் சர்மா-வும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதில், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கும் முக்கிய மாநிலங்களில் ராஜஸ்தான் இடம்பெற்றிருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன் ராஜஸ்தான் முதல்வராகப் பதவி வகித்த வசுந்தரா ராஜே-வுக்குப் பிறகு, ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரிதான் முதல்வராக வருவார் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தியா குமாரியையும், பிரேம்சந்த் பைர்வா-வையும் துணை முதலமைச்சராக்கியிருக்கிறது பா.ஜ.க தலைமை.
இது, ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகி இருக்கிறது.
தியா குமாரியின் அரசியல் பிரவேசம்:
ஜெய்ப்பூரின் முன்னாள் ராணி காயத்ரி தேவி, ஸ்வன்தந்தரா கட்சியிலிருந்து (Swatantra Party) ஜெய்ப்பூர் தொகுதியில் 1962, 1967, 1971 என மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் ஜெய்ப்பூரின் முன்னாள் பட்டத்து மன்னர் பவானி சிங், 1989 மக்களவைத் தேர்தலில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார், ஆனால் அவர் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவரது மகள்தான் தியா குமாரி.

இவரை 2013 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அப்போதைய முதல்வர் வேட்பாளராக இருந்த வசுந்தரா ராஜே பா.ஜ.க-வில் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார். அதன் பலனாக, அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் முன்னிலையில் தியா குமாரி பா.ஜ.க-வில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த அதே ஆண்டு, சவாய் மாதோபூரில், கிரோடி லால் மீனாவைத் தோற்கடித்து ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பா.ஜ.க முதல்வருடன் மோதல்:
அதன் பின்னர் பா.ஜ.க மாநிலத் தலைமைக்கும், தியா குமாரிக்கு மோதல் போக்கு தொடங்கியது. 2016-ம் ஆண்டில், ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணைய (ஜேடிஏ) அதிகாரிகள், ஜெய்ப்பூர் அரசக் குடும்பத்திற்குச் சொந்தமான ராஜ் மஹால் பேலஸ் ஹோட்டலின் வாயில்களுக்குச் சீல் வைத்தனர். சீல் வைக்கும் பணியின் போது, தியா குமாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மோதலின் படங்கள் செய்தித்தாள் முதல் பக்கங்களில் வந்து ராஜஸ்தான் அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்தன.

தியா குமாரி மற்றும் ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்பத்தினர், அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான மாநில அரசுடன் கடுமையாகச் சண்டையிட்டனர். இந்த சம்பவம் வசுந்தரா ராஜேவுக்கும், தியா குமாரிக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது. ஆனாலும், வசுந்தரா ராஜேவுக்கு எதிராகவோ, அல்லது மற்ற பா.ஜ.க தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசாமல் தவிர்த்து வந்தார்.
தேர்தலைப் புறக்கணித்த தியா குமாரி – சமாதானம் செய்த தலைமை:
அரசக் குடும்பத் தலைவருடன், அப்போது ஆட்சியிலிருந்த பா.ஜ.க முதல்வரின் மோதலாலும், 2017-ம் ஆண்டு ஆனந்த்பால் சிங் எனும் கேங்ஸ்டர் என்கவுண்டர் செய்யப்பட்டதும், அரச குடும்பங்களுக்கு மத்தியில் பா.ஜ.க மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், தியா குமாரி 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இதுபோன்ற காரணங்களால், பா.ஜ.க-வின் பாரம்பரிய ஆதரவாளர்களாக இருந்த அரச குடும்பங்கள், பெரும்பாலும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்தன. அதனால், 2018 சட்டமன்றத் தேர்தலில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சியிலிருந்து இறங்கியது. காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு தியா குமாரியை சமாதானப்படுத்திய பா.ஜ.க தலைமை அவரை 2019 மக்களவைத் தேர்தலில் ராஜ்சமந்த் தொகுதியில் நிறுத்தியது.
எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்:
நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக போட்டியாளர்களை ஓரம்கட்டிய தியா குமாரி, சுமார் 5.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்றிலிருந்து, பா.ஜ.க முகாமில் தியா குமாரியின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கட்சியின் மாநில செயற்குழுவில் பொதுச் செயலாளராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பத்திரிகையாளர் சந்திப்புக்களில் கடுமையாகப் பேசியும், போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியும் தன்னை முதல்வர் பதவிக்கான தலைவராக தலைமைக்கு அடையாளம் காட்டினார்.

துணை முதல்வர் பதவி:
தியா குமாரியின் இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு இணையாக, கட்சி வட்டாரங்களில் அவர் ஒரு சிறந்த தலைவராகக் கருதப்பட்டார். இந்த நிலையில்தான் தியா குமாரி முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் கசிந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிரான முதல் முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன் லால் சர்மா-வை முதல்வராகவும், தியா குமாரியை இரண்டு துணை முதல்வர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு பேட்டியளித்த தியா குமாரி, “இந்த வாய்ப்பை கொடுத்த பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் விட்டுச்சென்றுள்ளது. ராஜஸ்தானை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம். பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முதல்வராக பதவியேற்க இருக்கும் பஜன்லால் சர்மா கடினமாக உழைக்கக்கூடிய தலைவர். அவருடன் கட்சியில் பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவரின் அரசில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.