கொழும்பு: பொருளாதார நெருக்கடி மற்றும் கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு, மேலும், 3,000 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க, சர்வதேச நிதியம் முன்வந்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, கடந்தாண்டு துவக்கத்தில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்ததுடன், அவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத நிலையில், அரசின் நிதிநிலை மோசமாக இருந்தது.
மக்களின் போராட்டங்களால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபரானார். பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
பொருளாதாரத்தை மீட்கவும், கடன்களில் இருந்து மீளவும், சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை நாடியது. இதை ஏற்று, கடன்களை சீரமைக்க, இலங்கைக்கு, 3,000 கோடி ரூபாய் கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து, 48 மாதங்களில் இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மொத்தமாக, 24,000 கோடி ரூபாய் கடன் அளிக்க சர்வதேச நிதியம் முன் வந்துள்ளது. இலங்கையின் மொத்த கடனில், 52 சதவீதம் சீனாவிடம் இருந்து வாங்கியதே. கடனைத் திருப்பி செலுத்துவது தொடர்பாக, இலங்கை மற்றும் சீனா இடையே பேச்சு நடந்து வந்தது.
இதில் இழுபறி நீடித்ததால், சர்வதேச நிதியம், இலங்கைக்கு கடன் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, 3,000 கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இதையும் சேர்த்து, சர்வதேச நிதியம், இலங்கைக்கு மொத்தம், 5,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement