பெங்களூரு :பெங்களூரில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட வழக்கில், நேற்று ஒரே நாளில் ஆறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை
பறிமுதல் செய்தனர்.
லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் சிலர், பெங்களூரு ஆர்.டி., நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக, கடந்த ஜூலை மாதம், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, ஏழு கை துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், குண்டுகளை வெடிக்கச் செய்யும் நான்கு ரிமோட்களை பறிமுதல் செய்தனர். அங்கு தங்கியிருந்த சுஹைல் அகமது, 24, முகமது உமர், 29, ஜாஹித் தப்ரேஜ், 25, சையது முதாசீர் பாஷா, 28, பைசல் ரப்பானி, 30, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, என்.ஐ.ஏ.,விடம்
ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள முகமது உமர், முகமது பைசல் ரப்பானி, தன்வீர் அகமது, முகமது பாரூக் ஆகியோரது வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை ஆறு இடங்களில் நடந்தது. இதில், எலக்ட்ரானிக் உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், 7.30 லட்சம் ரூபாய் சிக்கின.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, பெங்களூரு டானரி சாலையில் வசிக்கும் அப்பாஸ் அலி என்பவரை, கடந்த 10ம் தேதி என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒருநாள் இடைவெளிக்கு பின், பெங்களூரில் மீண்டும் ஆறு இடங்களில், என்.ஐ.ஏ., சோதனை நடந்து உள்ளது. இதனால், பயங்கரவாதிகள் புகலிடமாக பெங்களூரு மாறி வருகிறதா என்ற அச்சம், நகர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement