ராமமூர்த்திநகர் : ஆங்கில புத்தாண்டை ஒட்டி, பெங்களூரில் விற்பனை செய்ய, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ராமமூர்த்திநகரில் ஒரு வீட்டில், போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மத்திய குற்றப்பிரிவின் போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் சோதனை நடத்தினர்.
பெட்ஷீட், சோப்பு டப்பாக்கள், அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டில் இருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த நபர் மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்த லியோனார்ட் ஓக்வுடிலி, 44, என்பது தெரிந்தது.
கடந்த ஆண்டு தொழில் விசாவில் பெங்களூரு வந்துள்ளார்.
இங்கு வந்த பின்னர், ‘டார்க்வெப்’ இணையம் மூலம், நைஜீரியாவில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி விற்று வந்தார்.
புத்தாண்டை ஒட்டி ‘ரேவ் பார்ட்டி’ நடக்கும் இடங்களில், போதைப்பொருளை விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எம்.டி.எம்.ஏ., 500 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 21 கோடி ரூபாய் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், கமிஷனர் அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் தயானந்தா பார்வையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement