சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா நாளை தொடங்குகிறது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பங்கேற்கிறார். இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது:
மியூசிக் அகாடமியின் 97-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா டிசம்பர் 15-ம் தேதி (நாளை) தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி வரை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெறுகிறது. இதில் தினமும் பல்வேறு கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை நடைபெறும் தொடக்க விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாடமி விருதுகள் பெறும் கலைஞர்களை அகாடமியின் நிர்வாக குழு கூடி, ஒருமனதாக முடிவு செய்தது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு, பிரபல கர்னாடக இசை பாடகி பாம்பே ஜெய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘சங்கீத கலாநிதி’ விருதாளர் என்ற வகையில், டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 2024 ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 97-வது இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளுக்கு அவர் தலைமை வகிப்பார். நிறைவு நாளான ஜனவரி 1-ம் தேதி மியூசிக் அகாடமியில் சதஸ் நடைபெறும். இதில், தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத ஆச்சார்யா’, ‘டிடிகே இசை அறிஞர்’ ஆகிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.