புதுடில்லி : ‘மஹாதேவ் ஆன்லைன்’ சூதாட்ட செயலி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல், துபாயில் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரின் நண்பர் ரவி உப்பல் ஆகியோர், மஹாதேவ் என்னும் பெயரில் ஆன்லைனில் விளையாடக்
கூடிய சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து நடத்தப்படும் இந்த சூதாட்டத்தில், இந்தியா உட்பட
பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்து உள்ளனர். இந்த செயலி வாயிலாக 6,000 கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்தது தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து அமலாக்கத்
துறையினருக்கு மாற்றப்பட்டது.
கடந்த செப்டம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை, மத்திய பிரதேசத்தின் போபால் உட்பட நாடு முழுதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவில், மஹாதேவ் நிறுவனத்துக்கு சொந்தமான 417 கோடி ரூபாய் சொத்துக்களை அதிகாரிகள் முடக்கினர்.
இந்த நிறுவனத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஹிந்தி நடிகர்கள் ரன்பீர் கபூர், கபில் ஷர்மா, நடிகையர்
ஹூமா குரேஷி, ஹினா கான் உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மஹாதேவ் நிறுவன உரிமையாளர்கள் சவுரப் மற்றும் ரவி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று அவர் மீது, ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசார்,
‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்தனர். இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்திய துபாய் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அடுத்த கட்ட விசாரணைக்கு ரவியை நம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் செய்து
வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement