சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் பகுதியில் கருணாநிதி சிலை நிறுவும் திட்டம் இல்லை: அரசு விளக்கம்

சென்னை: “மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் – ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8-இல் உள்ளது. முழுமையாக வாசிக்க > சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அருகே கருணாநிதி சிலை அமைக்க இடம் கொடுக்க விரும்பவில்லை: நில உரிமையாளர் தகவல்

இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத் துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களால், டிச.2-ம் தேதி அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத் துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக் கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, “மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு, மாவட்ட அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதற்கிடையில், நெடுஞ்சாலைத் துறையினர், ஏற்காடு சாலையின் எல்லையை அளவீடு செய்வதாகக் கூறி, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் இருக்கும் இடத்துக்குள் கடந்த 1-ம் தேதி முட்டுக்கல் நட்டுவைத்து, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்று எச்சரிக்கை பேனர் வைத்துவிட்டனர்” என்று மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அந்த இடத்தை வாங்கி, வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வரும் வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவன நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.