புதுடில்லி:ஊழியர்களுக்கான இ.எஸ்.ஐ., காப்பீடு நிலுவைத் தொகையை செலுத்தாத வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. முன்னாள் எம்.பி.,யான இவர் சென்னையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., காப்பீடு தொகையை இவர் கட்டாததை அடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த அக்டோபரில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து ஜெயப்பிரதாவுக்கு விலக்கு அளித்த அமர்வு, தண்டனைக்கு தடை விதித்தது. வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீடு கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement