பீஜிங்: சீனாவில், கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில், 515 பேர் படுகாயம் அடைந்தனர். 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடும் பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு இரவு நேரங்களில், மைனஸ் 11 டிகிரி செல்ஷியசுக்கும் குறைவாக பதிவாகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சீனாவின் சங்பிங் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் தண்ட வாளங்களில் கடும் பனிப்பொழிவு படர்ந்திருந்தது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் ரயிலை நிறுத்த முடியாமல் வழுக்கியபடி சென்றன. இதனால், அவ்வழியாக வந்த இரண்டு பயணியர் ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், ரயில்களில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 515 பேர் படுகாயம் அடைந்தனர்; 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. லேசான காயம் அடைந்தவர்கள், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், சீனாவில் தொடர்ந்து வானிலை மோசமடைந்து வரும் நிலையில், சில ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன. அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement