கூடலூர்: பாத யாத்திரையாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தாமதித்து வருகின்றன. இதனால் கட்டணக் கழிப்பறைகள் இந்த வழித்தடத்தில் அதிகரித்து வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதி மாலை மண்டல பூஜை வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம் சபரிமலைக்கான முக்கிய வழித்தடம் என்பதால் இப்பகுதி வழியே பக்தர்கள் லட்சக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களுக்காக வழி நெடுகிலும் அன்னதானக் குடில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதலுதவி, ஓய்வு எடுத்தல், வாகன பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை பல்வேறு அமைப்புகள் செய்து தந்துள்ளன.
இருப்பினும் கழிப்பறை வசதி சாலையோரங்களில் அதிகம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. பொதுவாக இந்த வழித்தடத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சபரிமலை சீசனில் தற்காலிக வசதிகளை செய்து தருவது வழக்கம். ஆனால், இம்முறை இதுபோன்ற வசதிகளை செய்து தரவில்லை. இதனால் கட்டணக் கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
மேலும் பெட்ரோல் பங்க்குகள், உணவகங்களிலும் இந்த வசதிகள் உள்ளன. இதன் மூலம் பக்தர்களின் சிரமம் ஓரளவு குறைந்து வருகிறது. இருப்பினும், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது போதுமானதாக இல்லை. இதனால் வீரபாண்டி தடுப்பணை, சீலையம்பட்டி மற்றும் உத்தமபாளையம் பெரியாறு போன்ற இடங்களுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
ஆற்றில் நீர்வரத்து அதிகம் இருப்பதுடன், வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு ஆழமான, பாதுகாப்பற்ற பகுதி தெரியாததாலும் நீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. ஆகவே மாவட்டத்தின் எல்லையான தேவதானப்பட்டி முதல் லோயர்கேம்ப் வரை உள்ள உள்ளாட்சி அமைப்புகள் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த தர்மராஜா கூறுகையில், பல நாட்கள் தொடர்ந்து பாதயாத்திரையாக வரு கிறோம். உணவு, ஓய்வெடுக்க உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் எங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் கழிப்பறை வசதி பல இடங்களில் இல்லை என்றார். உள்ளாட்சி அலுவலர்கள் கூறுகையில், தற்போதுதான் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் உரிய வசதி செய்து தரப்படும் என்றனர்.