கேப்டன் பதவியிலிருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். இது ஒரு தரப்பு ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகின் ஹைலைட்டே! இதன் அடிப்படையில் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் எதிர்காலம் என்ன என்பதும் பலரின் கேள்வியாக இருக்கிறது. ஒரு சிலர், ரோஹித் சர்மாவை சென்னை அணி எடுத்தால் நன்றாக இருக்குமே என்று ஜாலி, கேலி மீம்கள் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
மும்பை சார்பில் மூன்று கோப்பைகள், சென்னை சார்பில் மூன்று கோப்பைகள் என மொத்தம் ஆறு முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு உற்ற துணையாக இருந்தவர் அம்பத்தி ராயுடு.

2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணி, 2018 முதல் 2023 வரை சிஎஸ்கே அணி என இரு அணிகளிலும் விளையாடியவர், கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் எம்.எஸ்.தோனி உடனான கிரிக்கெட் பயணம் குறித்தும் தோனியின் ஓய்வுக்குப் பிறகு யார் சி.எஸ்.கே. கேப்டனாக வர வேண்டும் என்பது குறித்தும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்துப் பேசியவர், “தோனிக்குப் பிறகு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று சி.எஸ்.கே டீம் மேனேஜ்மென்ட் யோசிக்க ஆரம்பிச்சாட்டாங்க. என்னைக் கேட்டால், அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு இருக்கக் கூடிய வகையில் இளம் வீரர் யாரையாவது கேப்டனாகப் போட வேண்டும் என்று சொல்வேன். ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாகப் போடலாம் என்பது என்னுடைய ஆசை. தோனியின் கேப்டன்ஸியை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது. அவர் இல்லையென்றால் அதற்கேற்ப அணியை மாற்றியமைத்து புது வியூகம் வகுக்க வேண்டும்” என்றார்.

மேலும் தோனி குறித்துப் பேசியவர், “தோனி சிறப்பாக பேட்டிங், கீப்பீங் செய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதையெல்லாம் விட, இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து அதன் மூலம் அணியை வழி நடத்துவதே அவரின் சிறப்பு. தோனி இன்னும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.