“ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 13.12.2023-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைக்குள்- வெடித்து வெளிப்படும் வண்ணப் புகைக்கும் குப்பிகள் வீசப்பட்டன. இதனையொட்டி நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாட்டின் படுதோல்வி வெளிப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் மைசூரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையில், மக்களவை பார்வையாளர் மாடம் சென்று உள் நுழைந்தவர்கள் வண்ணப் புகைக் குப்பிகளோடு சென்றது எப்படி என்ற வினா இதுவரை விடை கிடைக்கவில்லை.

பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட படுதோல்விக்கு யார் காரணம் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என அவைத் தலைவர்களிடம் முறையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற நடைமுறைகளில் அனுமதிக்கப்பட்ட உரிமைகளை பறித்து, ஜனநாயகப் படுகொலை செய்த ஜனநாயக விரோத செயலுக்கு நியாயம் கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை 142 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏதேச்சதிகாரத்தின் உச்ச கட்டமாகும்.

சட்ட நெறிமுறைகள், ஒப்புக் கொள்ளப்பட்ட ஜனநாயக மாண்புகள், வழிவழியாக பின்பற்றப்படும் மரபுகள் அனைத்தையும் நிராகரிக்கும் மிக மோசமான பாசிச வகைத் தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்றி, ஆளும் கட்சி மட்டுமே பங்கேற்கும் நாடாளுமன்றத்தை நடத்திட பாஜக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி ஒரு கட்சி ஆட்சி முறையை மேற்கொள்ளும் பாஜக மத்திய அரசின் சர்வாதிகார செயலை கண்டித்து நாடு ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்து போராட முன் வர வேண்டும் என அறை கூவி அழைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.