புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீட்டை நீட்டிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.
மகளிர் இடஒதுக்கீட்டை புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு நீட்டிக்கும் வகையில் 2 மசோதாக்கள் மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட 2 மசோதாக்களை மாநிலங்க ளவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.தாக்கல் செய்யப்பட்டு 20 நிமிடங்களுக்குள் இரு மசோதாக்களும் நிறைவேறின.
இதையடுத்து மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் பேசும்போது, “பாதுகாப்பு அத்துமீறல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. நாடாளுமன்றம் பாதுகாப்புடனும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு அத்தமீறலை விசாரிக்க உயர்நிலை விசாரணைக் குழுவை சபாநாயகர் அமைத்துள்ளார். இந்தக் குழுவின் முடிவுகள் உரிய நேரத்தில் அவையில் பகிர்ந்துகொள்ளப்படும்” என்றார். பிறகு அவையை மாலை 4 மணி வரை ஒத்திவைத்தார்.