புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தலைவர்கள் நாடாளுமன்ற வளாக அறையில் நேற்றுமுக்கிய ஆலோசனை நடத்தினர்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்துகூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மல்லி்கார்ஜுன கார்கே கூறியதாவது:
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு, மிக தீவிர பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவையில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதில் ஆளும் பாஜகவுக்கு விருப்பம் இல்லை. ஜனநாயகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, “நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாநாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கோருகிறோம். இது இயல்பானது. நாடாளுமன்றத்தை முடக்க நாங்கள் விரும்பவில்லை. அரசு பதில் அளிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை’’ என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “பாஜக எம்பி பரிந்துரையின்பேரில் 2 இளைஞர்கள் மக்களவையில் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் வண்ண புகை குப்பிகளை மக்களவைக்குள் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இது மிக தீவிர பிரச்சினை. இதுகுறித்து விவாதிக்க குரல் எழுப்பினால் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.