பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த வேதஅறிஞர் கே. சுரேஷ் மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 57.
பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரை சேர்ந்தவர் கே. சுரேஷ் (57). சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியலில் தங்கப் பதக்கம்வென்ற இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆடிட்டராக பணியாற்றிவந்தார். ஏற்றுமதி மேலாண்மை, ஜோதிடஆராய்ச்சி ஆகியவற்றிலும் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.
வணிகவியல், ஏற்றுமதி குறித்து சர்வதேச இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதிய சுரேஷ்,ஜோதிட இதழ்களிலும் கட்டுரை எழுதி வந்தார்.இதுதவிர ‘கணபதி’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி, வேத மந்திரங்களை விளக்கி 500-க்கும் மேற்பட்ட வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் இவருக்குஉலகம் முழுவதும் பார்வையாளர்கள் கிடைத்தனர்.
ஏராளமான தனியார் நிறுவனங்களுக்கு நிதி மற்றும் நிர்வாக ஆலோசகராக வலம் வந்த சுரேஷ், மிகச் சிறந்த வேத அறிஞராகவும் விளங்கினார். இதனால் ஏராளமான கல்வி நிலையங்கள், ஆசிரமங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளில் வேத தத்துவங்கள் குறித்து உரையாற்றும் வாய்ப்புகள் தேடி வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் சுரேஷ் தனது வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. கே.சுரேஷின் மறைவுக்கு முன்னாள் பாஜக அமைச்சர் சுரேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.