தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் இன்று (டிச.19) மாலைக்குள் பத்திரமாக மீட்கப்படுவார்கள், அவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
மழை வெள்ளம் கரை காரணமாக இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டத்தில் அன்று இரவு 9.19 மணிக்கு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்கட்டமாக 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது. பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு, குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாததால் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடித்து வரும் நிலையில், மாநில மற்றும் மத்திய அரசுகள் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். இன்று அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகள் அனைவரும் இன்று மீட்கப்படுவர். பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் தயாராக உள்ளன. 500 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதும் பேருந்துகள் மூலம் 38 கி.மீ தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இன்று மாலை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரையில் இருந்து ரயில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுள்ளன. முன்னதாக, இதே ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.