புதுடில்லி காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிய, 12க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ”முதலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம்; பிரதமர் யார் என்பதை அதன் பின் முடிவு செய்யலாம்,” எனக் கூறி மல்லிகார்ஜுன கார்கே, அதை ஏற்க மறுத்துவிட்டார்.
லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்., – மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழத்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், காங்கிரஸ் தலைமையில், 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய, ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்த கூட்டணியின் முதல் கூட்டம், பீஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. அதை தொடர்ந்து கர்நாடகாவின் பெங்களூரு, மஹாராஷ்டிராவின் மும்பையில் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் நான்காவது ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
ஆதரவு
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுடில்லி வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசுகையில், ”இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பின் முடிவு செய்யப்படும்,” என்றார்.
இந்நிலையில், ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் முடிந்த பின், ம.தி.மு.க., – எம்.பி.,யும், அக்கட்சியின் பொது செயலருமான வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் முன்மொழிந்ததாக தெரிவித்தார்.
இதற்கு, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், 12 எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த முடிவுக்கு கைதட்டி ஆதரவு தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
இந்த கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக முடிவு செய்தனர்.
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 8 -10 பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த தலைவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
அனைத்து கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றினால் மட்டுமே இந்த கூட்டணி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
தொகுதி பங்கீடு குறித்து மாநில அளவில் பேச்சு நடத்தப்படும். இதில் ஏதேனும் பிரச்னை எழுந்தால், கூட்டணி தலைவர்கள் தலையிட்டு சுமுக தீர்வு காண்பர்.
தமிழகம், கேரளா, தெலுங்கானா, பீஹார், உத்தர பிரதேசம், புதுடில்லி, பஞ்சாப் என எந்த மாநிலத்தில் சிக்கல் எழுந்தாலும், அவை தீர்த்து வைக்கப்படும்.
தேர்தலில் வெற்றி பெறுவதே முதல் குறிக்கோள். அதற்கு செய்ய வேண்டியவற்றை குறித்து மட்டுமே இப்போது சிந்திக்க வேண்டும்.
எம்.பி.,க்கள் கிடைப்பதற்கு முன்பே பிரதமர் பதவி யாருக்கு என்பதை விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்; அதன் பின் பிரதமர் யார் என்பதை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவது மட்டுமே என் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து மாநில அளவில் பேச்சு நடத்தி ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் முடிவெடுக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பார்லி.,யின் இருசபைகளிலும் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை
இறுதியில் இந்த, ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கையை கண்டித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, வரும் 22ல் நாடு முழுதும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லியின் அசோகா ஹோட்டலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்., தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார்.
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உட்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.
கார்கே, பிரதமர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்த, 12 எதிர்க்கட்சிகளின் முழு விபரம் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில், கூட்டணியில் மீதமுள்ள கட்சிகள் என்ன நிலை எடுத்தன என்ற தகவலும் உடனடியாக தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்