The protest against the Kerala government is a blow to the Congress party | கேரள அரசை கண்டித்து போராட்டம் காங்கிரஸ் கட்சியினர் மீது தடியடி

திருவனந்தபுரம், கேரளாவில், மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, மாநில அரசின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் நோக்கில், ‘நவ கேரள சதாஸ்’ யாத்திரை கடந்த மாதம் துவங்கப்பட்டது.

மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் உட்பட மற்ற அமைச்சர்கள் சென்று மக்களிடையே விளக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தின் காளிசேரி பகுதியில் சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பினராயி விஜயன் அங்கு வந்தார்.

அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மீது, மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். எனினும் போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர்.

இதை கண்டித்து இளைஞர் காங்கிரசார், திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் நோக்கி நேற்று பேரணி சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது தடுப்புகளை மீறி இளைஞர் காங்கிரசார் செல்ல முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், போலீசாரின் வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.