புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கரை போன்று நடித்து, கிண்டல் செய்தார். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறும்போது, “நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். எங்கள் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் போன்று நடித்துக் காட்டியது அவரை அவமதிக்கும் செயல் ஆகாது. இது அரசியல் ரீதியாக சாதாரண நிகழ்வுதான். அதேநேரம், இதை ராகுல் காந்தி தனது செல்போனில் வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால் இதுபற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. இந்த விவகாரம் சர்ச்சையானதற்கு ராகுல்தான் காரணம் என்றார்.