மும்பை தானேயில் வசித்தவர் பாவ்னா. இவரின் கணவர் அமித். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடக்கூடியவர். ஹரியானாவை சேர்ந்த அமித், கடந்த ஐந்து ஆண்டுகளாக மனைவியை பிரிந்து சொந்த ஊரில் வசித்து வந்தார். அமித் சகோதரர் தானேயில் வசித்து வந்தார். தன்னுடைய இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாவ்னா மும்பை வந்து அமித் சகோதரர் விகாஷ் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அமித் ஹரியானாவில் இருந்து தன்னுடைய 8 வயது மகன் அங்குஷ் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வந்திருந்தார்.
இதற்காக கேக் வாங்கி வந்திருந்தார். பிறந்தநாளும் சிறப்பாக கொண்டாடினார். ஆனால் நேற்று வீட்டில் விகாஷ் வேலை விஷயமாக வெளியில் சென்று இருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாவ்னா மற்றும் இரண்டு குழந்தைகள் கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். இது குறித்து விகாஷ் கூறுகையில், “அங்குஷ் பிறந்தநாளுக்கு, அமித் கேக் வாங்கிக்கொண்டு வந்தார்.

அவர் எங்களுடன் 3 நாள்கள் இருந்தார். நான் காலை 7 மணிக்கே வேலைக்கு சென்று விட்டேன். மாலை 7 மணிக்கு வந்தபோது மூன்று பேரும் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். அங்குஷ் பயன்படுத்தும் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுக் இருந்தனர். உடனே நான் போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன். அமித் இங்கிருந்த 3 நாள்களில் பாவ்னாவுடன் எந்த வித வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. அமித் இது போன்று செய்வான் என்று எனக்கு தெரியாது.
தெரிந்திருந்தால் வீட்டில் தங்க அனுமதித்திருக்கமாட்டேன். கடைசியாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அமித் வந்துவிட்டு சென்றான்” என்றார். போலீஸார் விரைந்து வந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக, இன்ஸ்பெக்டர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் குனால் பாட்டீல் இது குறித்து கூறுகையில், “வழக்கமாக பாவ்னா காலையில் எழுந்து வீட்டிற்கு வெளியில் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவர் நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. விகாஷ் வரும் வரை எங்களுக்கு எதுவும் தெரியாது. அமித் வீட்டை விட்டு வெளியில் சென்றதையும் நாங்கள் பார்க்கவில்லை.

வீட்டிற்குள் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. கிரிக்கெட் மட்டையால் ஒரே அடியில் அடித்து கொலைசெய்யப்பட்டு இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
“அமித் தன்னுடைய மனைவிக்கு, தன்னுடைய சகோதரனுடன் திருமணம் தாண்டிய உறவு இருக்கும் என்ற சந்தேகத்தில் கொலைசெய்திருப்பார் என்று சந்தேகப்படுகிறோம்” என்று மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.