2003-ம் ஆண்டிலிருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படுவது வழக்கம். இந்த வருடம் 57 நாடுகளிலிருந்து மொத்தம் 127 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. நேற்று விழாவின் இறுதி நாளில், இதில் பங்கெடுத்த தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது மந்திரமூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‘உடன்பால்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ‘மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுவுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது. ‘அயோத்தி’ படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், ‘போர் தொழில்’ பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜிக்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் ‘போர் தொழில்’ பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கிற்குச் சிறந்த எடிட்டருக்கான விருதும் ‘மாமன்னன்’ படத்தில் பணியாற்றிய சுரேனிற்குச் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய ‘லாஸ்ட் ஹார்ட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனி நபர் ஜூரி விருது பிரிவில் ‘விடுதலை’ படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்திருக்கிறது.
விருது கிடைத்தது குறித்துப் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “படங்களை உருவாக்கும்போது படத்தின் கதைக்களமும், அதே வேளையில் ஜனரஞ்சகத்தன்மையும் பாதிக்காதபடி சில சமரசங்கள் செய்துகொள்கிறோம்.

அதனால் அவை சில நேரங்களில் சாதாரணமான படங்களாக வெளிவரும். நிறைய குறைகள், தவறுகளோடுதான் படங்களை எடுத்து முடிக்கிறோம். கதையின் நோக்கம், அதன் குறைகளை மறக்கடிக்கச் செய்கிறது. சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கதையாடல்களை நிகழ்த்தும் நோக்கத்தில் படங்களை உருவாக்குகிறோம். அதற்குத்தான் இந்த பாராட்டுகளும் அங்கீகாரமும் என நான் நம்புகிறேன். ‘விடுதலை’ போன்ற படத்துக்கு இந்தப் பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.