புதுடில்லி:லோக்சபாவுக்குள் இருவர் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து, பார்லிமென்ட் கட்டடத்தின் பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பார்லிமென்ட் கட்டடம் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தின் 22வது நினைவு தினமான டிச., 13ம் தேதியன்று, லோக்சபாவுக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, வண்ண புகை குழல்களை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அத்துமீறலில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், புதுடில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரல் அனிஷ் தயாள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, உயர்மட்ட விசாரணை குழு, பார்லி., கட்டடத்தின் பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான, ஜி.பி.எஸ்., என்றழைக்கப்படும், அரசு கட்டடங்களை பாதுகாக்கும் படை, மத்திய அமைச்சகங்களை பாதுகாக்கும் படை, தீயணைப்பு படையினர், பார்லி., பாதுகாப்பில் தற்போது ஈடுபட்டுள்ள படை ஆகியவற்றில் இருந்து நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், பழைய மற்றும் புதிய பார்லி., கட்டடம் முழுவதையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விரிவான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவர்களுடன் இணைந்து தற்போதுள்ள பி.எஸ்.எஸ்., எனப்படும் பார்லி., பாதுகாப்பு சேவை பிரிவினர், புதுடில்லி போலீஸ், பி.டி.ஜி., எனப்படும் பார்லி., கடமை குழு, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாட்டில் உள்ள அணு உலைகள், விமான நிலையங்கள், டில்லி மெட்ரோ, மத்திய அரசு கட்டடங்களை பாதுகாக்கும் பணியில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தற்போது, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் இருவரிடம் விசாரணை!
பார்லி., அத்துமீறல் சம்பவத்தில், லோக்சபாவுக்குள் ஊடுருவி வண்ண புகை குழல்களை வீசிய சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் பார்லி.,க்கு வெளியே கோஷங்களை எழுப்பிய நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அத்துமீறலுக்கு, மூளையாக செயல்பட்ட லலித் குமார் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் வித்யாகிரியை சேர்ந்த கணினி பொறியாளர் சாய்கிருஷ்ணா ஜகாலி மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடமும் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.இதில், சாய்கிருஷ்ணா ஜகாலி என்பவர், ஓய்வு பெற்ற போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகன். இவர் குற்றவாளி மனோரஞ்சனுடன் கல்லுாரியில் ஒன்றாக படித்துள்ளார். அப்போது இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.போலீஸ் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ள இந்த இருவரும், ‘பகத் சிங் விசிறிகள் மன்றம்’ என்ற, ‘பேஸ்புக்’ பக்கத்தில் உறுப்பினர்களாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்