பராகுவே:செக் குடியரசு நாட்டில் உள்ள பல்கலையில், மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பராகுவேவில் உள்ள சார்லஸ் பல்கலையின், தத்துவவியல் துறைக்குள் நேற்று முன்தினம் வந்த சக மாணவர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.
மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிசூடு நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாணவர் தன்னை தானே சுட்டுக் கொண்டாரா அல்லது போலீசார் சுட்டதில் பலியானாரா என்பது தெரியவில்லை.
காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒன்பது பேர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், பராகுவேவில் உள்ள வீட்டில் தன் தந்தையை நேற்று முன் தினம் சுட்டுக் கொன்றுவிட்டு பல்கலை வளாகத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் நடந்த சோதனைக்கு பின், மற்றொரு நபர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தையை, அந்த மாணவர் கடந்த 15ம் தேதி கொலை செய்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த மாணவர் நன்றாக படிக்க கூடியவர் என்றும், அவர் மீது குற்ற பின்புலம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்த போலீசார், அவரிடம் உரிமம் பெற்ற ஏராளமான துப்பாக்கிகளும், தோட்டாக்களும் இருந்ததை உறுதி செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement