நொய்டா:துடில்லி அருகே, கிரேட்டர் நொய்டாவில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வாய்க்காலில் கொட்டிய தொழிற்சாலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, கிரேட்டர் நொய்டா பாதாளச் சாக்கடை திட்ட முதுநிலை மேலாளர் வினோத்குமார் ஷர்மா கூறியதாவது:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை மீறி, கழிவுநீரை சுத்திகரிக்காமல் பாதாளச் சாக்கடையில் கொட்டிய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிற்சாலையின் கழிவு நீரை சுத்திகரிக்காமல் பாதாளச் சாக்கடையில் கொட்டினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை பாதாளச் சாக்கடையில் கொட்டுவதை நிறுத்துமாறு அந்த தொழிற்சாலைக்கு ஏற்கனவே ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. ஆனால், அந்த ஆலை நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2021ல் இதே ஆலைக்கு இரண்டு முறை இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ஆலை நிர்வாகம் அதை செலுத்தவில்லை.
இப்போது அந்த தொழிற்சாலைக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள அபராதத் தொகை ஒன்பது லட்சம் ரூபாயை நொய்டா ஆணையத்தின் வங்கிக் கணக்கில் உடனடியாக டெபாசிட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த ஆலையின் குத்தகைப் பத்திர விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணைய கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி அசுதோஷ் திவேதி, “தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, எச்சரித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement