சபரிமலை,:சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தும் வருமானம் குறைந்துள்ளதால் தேவசம்போர்டு கவலை அடைந்துள்ளது. சபரிமலைக்கு எதிரான தவறான பிரசாரம் காரணமாக காணிக்கை குறைந்து இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சபரிமலையில் இந்த ஆண்டு வருமானம் 25 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தும் காணிக்கை வரவு ஏன் குறைந்தது என்பதை தேவசம்போர்டு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க பினராயி விஜயனின் மா.கம்யூ., அரசு முயற்சி எடுத்தபோது திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக காணிக்கை எதிர்ப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சபரிமலை வருமானம் கேரளா அரசால் எடுக்கப்படுகிறது என்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு மிக அதிகமாக 379 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இரண்டு ஆண்டுகள் கோவிட் காரணமாக பக்தர்கள் சபரிமலை வராத நிலையில் கோயிலுக்காக சேமித்திருந்த பணத்தை அதிக அளவில் காணிக்கையாக செலுத்தியதாக கருதப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கூட்டம் இருந்தும் வருமானம் குறைந்துள்ளது.
சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் 1252 கோயில்கள் உள்ளது. இதில் 62 கோயில்களில் மட்டுமே நல்ல வருமானம் வருகிறது. திருவனந்தபுரம் பரசுராமர் கோயிலில் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஸ்ரீகண்டேஸ்வரம், மலையாளப்புழா ஏற்றுமானூர், வள்ளியக்காவு , வைக்கம் கோயில்களில் 50 கோடியை நெருங்கும் அளவு வருமானம் வருகிறது. கொட்டாரக்கரை கணபதி கோவிலில் வருமானம் வந்தாலும் அது தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சபரிமலை உள்ளிட்ட எல்லா கோயில்களில் இருந்தும் 700 முதல் 800 கோடி ரூபாய் தேவசம்போர்டுக்கு ஆண்டு வருமானம் வருகிறது. இதில் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் சபரிமலையில் பொது பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்படுகிறது.
கோயில்களில் தினசரி செலவு, சம்பளம், பென்ஷன் இவற்றுக்காக ஒவ்வொரு மாதமும் 50 கோடி ரூபாய் வேண்டும். தேவசம்போர்டில் 5000 ஊழியர்களும், நான்காயிரம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
சபரிமலை வருமானத்தை வைத்தே திருவிதாங்கூர் தேவசம்போர்டு செயல்பட்டு வரும் நிலையில் காணிக்கை குறைந்தால் அது வருமானம் இல்லாத கோயில்களையும், ஊழியர்களையும் பாதிக்கும் என்று கவலை அடைந்துள்ளனர்.
மகர விளக்கு காலத்தில் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் வருமானம் அதிகரிக்கும் என்று தேவசம் போர்டு எதிர்பார்க்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement