Hijacking a plane with Indians? Foreign officials talk to travelers! | இந்தியர்களுடன் விமானம் கடத்தலா? பயணியரிடம் துாதரக அதிகாரிகள் பேச்சு!

பாரிஸ்: ஆள்கடத்தல் நடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, 303 இந்தியர் பயணித்த தனியார் விமானம், பிரான்சின் பாரிஸ் அருகே திடீரென தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள், விமான பயணியரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு, தனியார் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.

ஐரோப்பிய நாடான ருமேனியாவைச் சேர்ந்த, ‘லெஜண்ட் ஏர்லைன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்கும் இந்த விமானம், பிரான்சின் பாரிஸ் நகரம் அருகே நேற்று முன்தினம் திடீரென தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில், 303 இந்தியர்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, பாரிசில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறைக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரை, பாரிஸ் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

இந்த, 303 இந்தியர்களையும், சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது வடஅமெரிக்க நாடான கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளதாகவும், இது குறித்த தகவல் கிடைத்து, பாரிஸ் போலீசார், அந்த விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் தவிர, விமானத்தில் உள்ள மற்றவர்கள், விமான நிலைய வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாரிசில் உள்ள இந்திய துாதரகம், சிறப்பு அனுமதி பெற்று, இந்திய பயணியரை சந்தித்து பேசியுள்ளதாக, நம் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஒரு நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது. எதற்காக, 303 இந்தியர்கள் அதில் அழைத்து செல்லப்பட்டனர். ஆள் கடத்தல் நடந்ததா என்பது தொடர்பாக எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இது குறித்து லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வழக்கறிஞர் லிலியானோ பாக்யோகோ கூறுகையில், ”எங்கள் நிறுவனம் எந்த தவறும், எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

”எங்கள் மீது எந்த தவறும் இல்லை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். பயணியரின் குற்ற பின்னணி குறித்து விசாரிப்பது எங்கள் வேலையல்ல,” என்றார்.

இது குறித்து பிரான்சிலிருந்து வெளியாகும் பத்திரிகையில், ‘இந்த விமானத்தில் இருந்த பயணியரில், 13 பேர், 2 – 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். இவர்களது பெற்றோரோ, பாதுகாவலரோ உடன் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.