மும்பை: வடகிழக்கு நகரம் ஒன்றின் (மணிப்பூர் தலைநகர்) பெயர் சூட்டப்படும் இந்தியாவின் முதல் போர்க் கப்பலான ‘ஐஎன்எஸ் இம்பால்’ நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அதிநவீன ஏவுகணை அழிப்புகப்பலான ஐஎன்எஸ் இம்பால், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது. டிஆர்டிஓ உள்ளிட்ட பொதுத் துறை மற்றும்தனியார் துறை பங்களிப்புடன் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. விசாகப்பட்டினம் வகை ஏவுகணை அழிப்பு கப்பலில் இது மூன்றாவது கப்பலாகும். இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,400 டன் எடையும் கொண்டது. மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இதன் 75 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
துறைமுகத்திலும் கடலிலும் பல்வேறு கட்ட சோதனைகளை முடித்த பிறகு கடந்த அக்.20-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஐஎன்எஸ் இம்பால் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்நிலையில் மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் இக்கப்பல் நாட்டின் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.