ஐபிஎல் வீரர் vs முன்னாள் காதலி: கட்டாய கருக்கலைப்பு… போதைப்பொருள் – பின்னணி என்ன?

KC Cariappa Allegations In Tamil: ஐபிஎல் தொடர் மூலம் பிரபலமான ஒரு சுழற்பந்துவீச்சாளர் கடந்த சில நாள்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வந்தார் எனலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய உள்ளிட்ட ஐபிஎல் அணிகளில் விளையாடியவரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான கே.சி. கரியப்பா தான் அந்த வீரர்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

அவரது முன்னாள் காதலி மூலம் தற்போது அதிர்ச்சியூட்டும் சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். போதைப்பொருள் பயன்பாடு முதல் கட்டாய கருக்கலைப்பு வரை கரியப்பாவும், அவரது முன்னாள் காதலியும் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

இந்த தொடர் சர்ச்சைகளுக்கு இடையில், தனது முன்னாள் காதலி போதைப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் வீடியோவை கரியப்பா வெளியிட்டிருந்தார். மேலும், அவரது முன்னாள் காதலி மீதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார், அவர் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்றும், அதிகப்படியான குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதில் திருப்புமுனையாக அவரின் முன்னாள் காதலி கூறுகையில், கரியப்பா தன்னை கர்ப்பமாக்கியதாகவும், மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறி, கரியப்பாவுக்கு மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இருவரும் மாறி மாறி குற்றம் கூறி வரும் நிலையில், பெங்களூரு போலீசார் இவற்றை விசாரித்து வருகின்றனர். 

பெங்களூரு காவல்துறையின் பதில்

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா, செய்தியாளர்களிடம் பேசுகையில், வீடியோவின் உள்ளடக்கம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், நடைமுறை தாக்கங்கள் கவனமாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். போதைப் பொருள்களின் ஆதாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், முழுமையான மற்றும் நியாயமான விசாரணையை உறுதிசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் வலியுறுத்தினார்.

கே.சி கரியப்பாவின் கதையின் பக்கம்

இதுகுறித்து கிரிக்கடெ் வீரர் கரியப்பா காவல்துறையிடம் அளித்த விளக்கத்தில், போதைப் பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் பாலியல் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டதால் தனது முன்னாள் காதலியிடம் இருந்த உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கட்டாய கருக்கலைப்பு குற்றச்சாட்டுகளுக்கு கரியப்பா மறுப்பு தெரிவித்தார். முன்னதாக, தனது கிரிக்கெட் வாழ்வை சீரழித்துவிடுவதாக தனது முன்னாள் காதலி தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி கரியப்பா காவல்துறையின் உதவியை நாடினார். 

கே.சி கரியப்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை

கே.சி கரியப்பா இதுவரை 13 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 45 டி20 ஆட்டங்களிலும் விளையாடி உள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள கரியப்பா 11 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த மாதம் 19ஆம் தேதி துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கரியப்பாவும் விண்ணப்பித்தார். அவர் தனது அடிப்படை தொகையாக ரூ.20 லட்சத்தை நிர்ணயித்த நிலையில், அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தற்போது இந்த சர்ச்சை அவரது கிரிக்கெட் எதிர்காலத்தையும் சிக்கலுக்குள்ளாக்கி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.