`பாராசைட்’ (Parasite) பட நடிகர், லீ சன் கியூன் காரில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்…
ஆஸ்கர் விருது வென்ற பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான `பாராசைட்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், லீ சன் கியூன் ( Lee Sun-kyun).
48 வயதான லீ சன் கியூன் புதன்கிழமையன்று மத்திய சியோலில் ஒரு பூங்காவில் காரின் உள்ளே போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

காரின் உள்ளேயே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் மர்மங்கள் நீடிக்கின்றன. இதுவரையில் தென் கொரிய அரசும் நடிகரின் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லீ சன் கியூன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸாரின் விசாரணையில் இருந்தார். தென் கொரியாவைப் பொறுத்தவரையில் சட்டவிரோத போதைப் பொருள்கள் மீதான சட்டங்கள் மிகவும் கடுமையானவை.
மரிஜூவானா போன்ற போதைப்பொருள்களை வெளிநாட்டில் எடுத்துக் கொள்ளும் தென்கொரியர்கள் கூட தங்களது நாட்டிற்கு வந்தால் அவர்கள் மீது வழக்கு தொடரும் அளவிற்கு, போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் அங்கு கடுமையாக இருக்கிறது.

`போதைப்பொருள் பயன்படுத்திய சம்பவத்தால் குடும்பத்தினருக்கும், பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என லீ சன் கியூன் அப்போதே கூறியிருந்தார்.
இவரின் மனைவி நடிகை ஜியோன் ஹை ஜின். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல. அனைத்தும் இறுதியில் மாறும் என்று நம்புங்கள்; மாறாவிடின் அது இறுதியல்ல என்று நம்புங்கள்… உறுதியாக இருங்கள்!