'சலார் 2' இன்னும் மிரட்டலாக இருக்கும் : ஸ்ரேயா ரெட்டி

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'சலார்'. முதல் பாகமாக 'சலார் 1 – த சீஸ்பயர்' என்ற பெயரில் அப்படம் வெளிவந்தது. முதல் பாகத்தில் கான்சார் நாட்டின் மன்னர் ராஜமன்னார் மகளாக 'ராதா ரமா' என்ற முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் 'திமிரு' நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்தார்.

தமிழில் 'திமிரு' படத்திற்குப் பிறகு “வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், அண்டாவ காணோம்' ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தெலுங்கில் 'அப்புடப்புடு, அம்மா செப்பிந்தி' ஆகிய படங்களில் நடித்த ஸ்ரேயா சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் 'சலார்' மூலம் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்திற்காக ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். படத்தைப் பற்றிப் பேசிய ஸ்ரேயா, “சலார் 2' படத்தில் எனது கதாபாத்திரம் நீண்ட நேரம் இடம் பெறும். முதல் பாகத்தில் கதாபாத்திர அறிமுகம் மட்டுமே இருந்தது. இரண்டாம் பாகத்தில்தான் நிஜமான பல விஷயங்கள் நடக்கும். அது இன்னும் மிரட்டலாக அதிரடியாக இருக்கும்.

பிரசாந்த் நீல் என்னைத் தொடர்பு கொண்ட போது சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லை. ஆனால், அவர் என்னை வற்புறுத்தினார். படத்திற்காக கதை எழுதும் போது முதலில் என் கதாபாத்திரம் இல்லையாம். எழுத ஆரம்பித்த பின் ஒரு பெண் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்துள்ளார். இருப்பினும் எனது கதாபாத்திரத்தை அழகான ஒரு வில்லியாகத்தான் உருவாக்கியிருந்தார். பெண்கள் வில்லியாக நடித்தால் அவர்களை 'டெவில்' தோற்றத்தில் காட்டக் கூடாது என நினைத்திருந்தார்.

இந்தப் படத்தையடுத்து பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் நடிக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பது ரகசியமாகவே இருக்கட்டும். படத்தில் நான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. இப்படத்தில் நடித்த பின் 'ரிட்டயர்' ஆகிவிடுவேன், ஏனென்றால் அந்த அளவிற்கு அது ஒரு சிறந்த கதாபாத்திரம்,” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.