மாஸ்கோ,தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அடுத்தகட்ட அணு உலைகள் அமைப்பது தொடர்பாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன், தலா, 1,000 மெகாவாட் திறனுள்ள ஆறு அலகுகள் அமைக்க, 2002ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்வேறு எதிர்ப்புகள் உள்ளிட்ட காரணங்களால், நீண்ட இழுபறிக்குப் பின், முதல் அலகு, 2016ல் செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது அலகும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தற்போது, மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளுக்கான கட்டுமானங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஐந்து நாட்கள் பயணமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம், அந்த நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவை சந்தித்து பேசினார்.
அப்போது, மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உட்பட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், கூடங்குளத்தில் அடுத்தக் கட்ட அலகுகள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த சந்திப்புக்கு பின் நடந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசுகையில், ஜெய்சங்கர் இதை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவுடனான சந்திப்பு மிகவும் வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்தது. இந்த சந்திப்பின்போது, கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்கால திட்டங்களுக்கான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை நேற்று ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
”இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மிகவும் வலுவடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் நாங்கள் இருவரும் ஏழாவது முறையாக சந்தித்து, பேசியுள்ளோம். இதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு, நட்பு, முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்,” என, ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்