சியோல்ஆஸ்கர் விருது வென்ற, பாரசைட் திரைப்படத்தில் நடித்த பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன் கியூன், 48, பூங்கா ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ல் வெளியான தென் கொரிய படமான பாரசைட், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உட்பட நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் லீ சுன் கியூன்.
சியோலில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதிவிட்டு, சமீபத்தில் வீட்டைவிட்டு மாயமானார்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இருந்து, இறந்த நிலையில் லீ சுன் கியூனின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
மரணத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், லீ சுன் கியூன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆகையால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement