சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், “அரிதாரம் பூசிய நடிகராக திகழ்ந்தாலும் உண்மை வாழ்வில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர். சமூக அவலங்களை திரைப்படத்திலும் நிஜ வாழ்விலும் தட்டிக் கேட்ட துணிச்சல் மிக்க நபர்.
பசி என்று தன்னை அணுகி வரும் யாரும் இருந்து விடக்கூடாது என்று எந்த நேரத்திலும் வந்தவருக்கு உணவிட்டு மகிழ்ந்தவர். பிறருக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது ஊடகத்தின் விஷ கொடுக்குகளில் தன்னை அறியாமல் சிக்கிக் கொண்டவர். நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.